தினம் ஒரு தகவல் : தாவரங்களும் பேசுகின்றன...!


தினம் ஒரு தகவல் : தாவரங்களும் பேசுகின்றன...!
 
தாவரங்களுக்கு உணர்வும் அறிவும் இருக்கின்றன, என்கிறார் பரிணாமவியல் சூழலியலாளர் மோனிகா கக்லியானோ.

தான் மேற்கொண்ட அறிவியல் சோதனைகளின் விளைவாகவும், அறிவியல் தரவுகளின் அடிப்படையிலும் இந்தக் கருத்து உருவானது என்றும், மூளையும் நரம்பு மண்டலமும் இல்லாவிட்டாலும், அறிவாற்றலை கொண்டு தாவரங்களால் செயல்பட முடியும் எனவும் அவர் கூறுகிறார்

தாவரங்கள் பேசுவதை மனிதர்களால் கேட்க முடியுமா?

சொற்களை பயன்படுத்தி பேசுவது என்ற மனித வழக்கத்தின்படி, அவை பேசுவதில்லை. ஆனால், அவை பேசுவதை கேட்க வேண்டுமென யாரேனும் விரும்பினால், அவை பேசும்.

தாவரங்களால் கட்டமைக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கு இயற்கையிலேயே ஒத்திசைவு கொண்ட உயிரினங்கள் நாம். எனவே, ஏதாவது ஒரு வழியில் அவற்றுடன் நாம் தொடர்புகொள்ள வேண்டியது அவசியம். அப்போதுதான் நாம் எப்படி ஒருவரோடு மற்றொருவர் இணைந்திருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். இன்றைய சூழலியல் சீர்கேடுகளுக்கு முக்கிய காரணம், தாவரங்களுடன் கொண்டிருந்த உறவை நாம் மறுத்து வருவதுதான் காரணம்.

மனிதர்களுடன் உறவை ஏற்படுத்திக் கொள்வதைப் போன்றது தான் இதுவும். நமக்கு விருப்பமான சிலருடன் உரையாடுவது மகிழ்ச்சியைத் தரும். அதை போலவே, சிலருடன் பேசுவதை நாம் விரும்புவதில்லை. தாவரங்களை வளர்ப்பவர்கள், அவற்றின் அருகில் இருப்பவர்கள் எந்த நேரமும் அவற்றை கவனித்துக் கொண்டிருப்பதால் அவற்றின் மொழியை அறிய முடியும். எல்லாவற்றுக்கும் மேலாக உங்கள் உடலையும் மனதையும் அமைதிப்படுத்தி, அவை என்ன சொல்ல வருகின்றன? என்று கவனிக்கவும், புரிந்துகொள்ளவும் முயல வேண்டும். கருணையோடு அவற்றை அணுகி தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். எல்லா உறவுகளுக்குமே இதுதான் அடிப்படை.

ஓர் உயிர் அறிவாற்றலுடன் திகழ்வதற்கு மூளை தேவை இல்லை. அறிவியல் பூர்வமாக இதை நிரூபிப்பதற்கு இப்போது எங்களிடம் தரவுகள் இருக்கின்றன. தாவரங்கள் ஒன்றோடொன்று பேசுவது மட்டுமல்லாமல், கற்பது, நினைவில் கொள்வது, முடிவெடுப்பது போன்ற திறன்களையும் கொண்டிருக்கின்றன என்பதற்கான தரவுகளும் எங்களிடம் உள்ளன.

இவை அனைத்தும் அறிவாற்றலுடன் சம்பந்தப்பட்டவை. முடிவெடுப்பது, கற்றல் ஆகியவற்றுக்கு வி‌‌ஷயங்களை தேர்ந்தெடுக்கும் திறன் தேவைப்படுகிறது. எனவே, தாவரங்கள் அறிவாற்றல் மிகுந்தவையே என விளக்கம் அளிக்கிறார், பரிணாமவியல் சூழலியலாளர் மோனிகா கக்லியானோ.

Comments